கோயில் பிரவேசமசோதா.  குடி அரசு - தலையங்கம் - 30.10.1932

Rate this item
(0 votes)

அடுத்து வரப்போகும் சென்னைச் சட்ட சபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆவயப் பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும் ஆர்வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன் வந்திருக் கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமூகத்தின்பாலும் கொண்டிருக்கும். உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சமவுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று ஐயமறக் கூறுவோம். ஆனால் இம்மசோதா சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை. ஆனால் அரசாங்கத்தார், இம்மசோதாவுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் கூட மனம் வைத்தால், சென்னைச் சட்டசபை அரசாங்கத்தின் தயவில்லாமலே, இம்மசோதாவைச் சட்டமாக்கி விட முடியும். எப்படியெனில் இப்பொழுது சென்னைச் சட்டசபையில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியும், மெஜாரிட்டி யாகயிருக்கும் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியாகும். இப்பொழுது ஆலயப்பிரவேச மசோதாவைக் கொண்டு வரப்போகும், திரு. சுப்பராயன் அவர்கள் எதிர்க் கட்சியின் தலைவராவார். ஆகவேதிரு. சுப்பராயன் அவர்களின் மசோதாவை அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. சட்டசபையின் மெஜாரிட்டிக் கட்சியினரான ஜஸ்டிஸ் கட்சி யினரும் இம்மசோதாவை ஆதரிப்பார்களானால், அது சட்டமாகிவிடு மென்பதற்குச் சந்தேகமில்லை. 

ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தக் கொள்கையையே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினர்களுக்கும் ஆலயங்களில் சமவுரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகையால், அவர்கள் தமது எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்கமாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகின்றோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர். திரு சுப்பராயன் அவர்களுடைய கட்சிக்கும். தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும், "எதிர்க் கட்சியினர் எந்த நல்லமசோதா வைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே நமது கடமை" என்னும் அரசியல் வஞ்சந் தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும். இம்மசோதாவை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும், அல்லது எதிர்த்தாலும், அது மிகவும் வெறுக்கத்தகுந்த செய்கை யாகுமென்றே நாம் கூறி எச்சரிக் கின்றோம். 

இப்பொழுது வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதா சட்ட மாகுமானால், அதன் மூலம் எல்லா வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும், இந்து மதக் கோயில்களில் தடையில்லாமல் செல்லுவதற்கு உரிமையுண்டாகு மென்பது நிச்சயம். ஆதலால் இத்தகைய மசோதா ஒன்று சென்னைச் சட்ட சடையில் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே, நமது நாட்டு வைதீகர்கள் அதைக் கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த மசோதாவைச் சட்ட சபையில் கொண்டு வர அனுமதியளிக்கக் கூடாது என்று மேன்மை தங்கிய வைசிராய், கவர்னர் முதலியவர்களுக்கு தந்திகளும் தீர்மானங்களும் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல பொதுக் கூட்டங்கள் என்னும் பெயரால் வைதீகர்கள் இம் மசோதாவைக் கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தீண்டாதார்களுக்கு ஆலயப் பிரவேசம் அளிப்பது சாஸ்திரங்களுக்கு விரோதம்; மதத்திற்கு விரோதம்: பழக்க வழக்கங்களுக்கு விரோதம்: ஆகையால் தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும்படியான சட்டஞ் செய்யக் கூடாது என்று கூச்சலிடுகின்றனர். இக்கூச்சலைச் சட்ட சபை உறுப்பினர்களும், அரசாங்கத் தார்களும் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாமல், டாக்டர் சுப்பராயன் அவர் களின் மசோதாவைச் சிறந்த திருத்தங்களுடன் சட்டமாகச் செய்ய ஆதர வளிக்க வேண்டுகிறோம். வெகு காலமாக நமது நாட்டில் கோயில் பிரவேசத் திற்குத் தடை செய்து கொண்டிருந்த சமூகம் பார்ப்பன சமூகம் ஒன்றேயாகும். இன்று அச்சமூகத்திலும், பகுத்தறியும் மூளையற்ற - சாத்திரப்பித்தும், சுயநலப் பித்தும் கொண்ட வைதீகர்களே கோயில் பிரவேசத்திற்குத்தடை கூறிக் கொண்டிருக்கின்றவர்கள். ஆதலால், மற்ற சமூகங்களின் ஜனத் தொகையை விட மிகக் குறைந்த ஜனத் தொகையையுடைய ஒரு சமூகத் திலுள்ள சில எண்ணிக்கையையுடைய வைதீகர்களின் கூச்சலுக்கோ, தடைக்கோ பயந்து சென்னைச் சட்ட சபையானது இம்மசோதாவை நிராகரிக் குமாயின் அதை விட பேடித் தன்மையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை முன்னெச்சரிக்கையாகவே கூறிவிட விரும்புகிறோம். 

இச்சமயம், தீண்டாதார்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பொது ஜனங்கள் விரோதமாக இருக்கிறார்கள்” என்னும் சாக்குச் சொல்ல முடியாது. 

 

இந்தியா முழுவதும், சுதேச சமஸ்தானங்களிலும் கூட, தீண்டாதார்க்கு ஆலயப்பிரவேச உரிமையும், மற்றும் இந்துக்களுடன் சம உரிமையும் இருக்க வேண்டும் என்னும் கொள்கையை ஆதரித்து வருகிறார்கள். பொது ஜனங் களின் அபிப்பிராயம் அவர்கள் சமத்துவ உரிமைக்குச் சாதகமாகவே திரும்பி இருக்கிறது என்பதை நாட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சிகளைக் காண்போர் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அரசாங்கத் தாரும், சட்டசபை உறுப்பினர்களும் இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விடாம விருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவவிட்டு விடுவார்களானால், அவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தை அவட்சியம் செய்தவர்களாகவும், பொது ஜன நம்பிக்கைக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாகவும். ஆகிவிடு வார்களென்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். 

டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத் தாரும். உண்மையிலேயே எல்லாச் சமூகங்களும் ஒற்றுமையடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில் எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் செல்லலாம்” என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும். 

இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக்களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும்” என்று கோருவதாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ்வகை யிலும் குற்றமாகாது. இன்று முஸ்லிம்களுடைய மசூதிகளில் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லிம்கள் அந்நிய மதத்தினரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும்"ஜபத்தில்” கலந்து கொள்ள லாம். கிறிஸ்துவர்களும் அந்நிய மதத்தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக் கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும் எந்த மதத்தினர்களும் தாராளமாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும். ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய்விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வதனால் பல மதத்தினர்க்குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழியாகும். ஆகையால் இம்முறையில் மசோதாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென்னைச் சட்டசபை தைரியமாக முன் வருமா? என்று தான் நாம் கேட்கிறோம். 

சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறு மானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு. இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின், இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என்றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். 

இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில், நமக்கு இவ்வளவு அக்கரை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாகும். “எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும். அங்கு தெய்வமிருக்கிறது. அல்லது கடவுளிருக்கிறது" என்னும் நோக்கத்து டன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும் தேசத் தின் பொதுச்சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவைகளுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவேசத்தை முழுமனதுடன் ஆதரிக்கின்றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சியையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

குடி அரசு - தலையங்கம் - 30.10.1932

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.